முத்தமிழ்ச் சக்கரவர்த்தி கலைமாமணி அவ்வை டி. கே. சண்முகம் அவர்கள் -- சாணக்கியன்
....மேலும்இந்நாடகத்தின் உரையாடல்கள் என் உள்ளத்தைக் கவர்ந்தன. மிகச் சிறந்த முறையில் இலக்கிய நயம்செறிந்து விளங்குவது பாராட்டுக்குரியது. சாணக்கியனை
இந்நாடகத்தின் உரையாடல்கள் என் உள்ளத்தைக் கவர்ந்தன.  மிகச் சிறந்த முறையில் இலக்கிய நயம்செறிந்து விளங்குவது பாராட்டுக்குரியது.  சாணக்கியனைத் திரைப்படமெடுக்க விரும்புபவர்கள் இந்நாடகத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது என் கருத்து.
..... இவர் நாடகம் ஆக்கும் துறையிலே நல்ல ஆற்றல் வாய்ந்தவராகக் காணப்படுகிறார்.  இவரின் நாடகமுயற்சிகளை வரவேற்பதன் மூலம், நல்ல மேடை நாடகங்களும், இவரிடமிருந்து தமிழர்க்குக் கிடைக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்.  திரு தாமரைக்கண்ணரின் நாடகப் புலமை வாழ்க ! 9.4.1954
‘தினமலர்’ நாளிதழ் ஆசிரியர்மனிதருள் மாணிக்கம் டாக்டர் இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள்
....மேலும்நண்பர் தாமரைக்கண்ணன் புலமைச் சிறப்பைக் கடந்த எட்டு ஆண்டுகளாக நான் நன்கு அறிவேன்.தினமலர் நாள் இதழில் தாமரை, ஜனநாதன், பாஞ்சாலிமகன், அம்சா,
அம்பா, அச்சிறுபாக்கத்தார், யாரோ, ஜானகி ராமன் போன்று பல புனைபெயர்களில், சிறுகதை, நாவல், நாடகம், வரலாறு, ஆராய்ச்சி, கவிதை முதலான சுமார் 300 நூல்களுக்கு மேல் மதிப்புரை எழுதியுள்ளார்.
கவிதை நூல்களுக்குள் கவிதை நயத்தோடு மதிப்புரைகள் எழுதினார்.  இலக்கிய நூல்களுக்கு இலக்கிய நோக்கோடு வரைந்தார்.  ஆய்வு நூல்களுக்கு மிகச் சிறந்த ஆராய்ச்சி அணுகுமுறையோடு அலசினார்.இவர் எழுதியுள்ள நூல் மதிப்புரைகள் நடு நிலைமையுடன் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
நூலாசிரியர்களின் தனிப்பட்ட கொள்கைகளை மனத்தில் கொண்டு மதிப்புரை எழுதாமல், நூல்களின் மூலம் நூலாசிரியர்களின் மனவியற்கோட்பாடுகளை அகழ்ந்து இவர் எழுதியுள்ள மதிப்புரைகள் ‘விமர்சன உலகின்’ ஒளிக்கீற்றுகள் ஆகும்.இத்தகைய புதிய அணுகுமுறைகளைக் கையாண்டு அதில் வெற்றியும் படைத்துள்ளார்.
பல்துறை எழுத்தாளராகிய இவர் நூல் பதிப்புத்துறையிலும் வல்லவர்.  இவர் எழுதியுள்ள நூல்களைக் கண்ணைக்கவரும் வகையில் அற்புதமாகப் பதிப்பித்துள்ளார்.தொல்பொருள் ஆய்வுத் துறையில் இவர் கண்டுபிடித்துள்ள புதிய கல்வெட்டுகளும், எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகளும் தமிழக வரலாற்றுக்குப் பெரிதும் துணை புரியக் கூடியவை.
தமிழ் இலக்கிய உலகின் சிறுகதைத்துறை, நாடகத்துறை, கல்வெட்டு ஆய்வுத்துறை, நூல் மதிப்புரைத்துறை முதலான பல துறைகளிலும் இவர் பெயர் நிச்சயம் இடம் பெறும்.அவ்வாறு இவர் பெயர் இடம் பெறாது போனால் அந்தந்தத் துறைகளின் ஆய்வுநூல்கள் முழுமை பெற்றவை ஆகா என்பது என் கருத்து.  அந்த அளவுக்கு ஒவ்வொரு துறையிலும் தமது எழுத்து வன்மையால் தனித்தன்மை பெற்றுள்ளார்.
திரு. தாமரைக்கண்ணன் பழகுவதற்கு இனிமையானவர்.  நல்ல நட்பின் இலக்கணமாகத் திகழ்பவர்.ஒரு நொடிப்பொழுதைக்கூட வீணாக்காமல் தேனீயைப் போல் எந்நேரமும் சுறுசுறுப்பாகச் செயலாற்றிவரும் ஆர்வமே இவர் புகழுக்குக் காரணம்.  இவருடைய ஓயாத உழைப்பும் திறமைகளுமே நான்கு முறை தமிழக அரசின் பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றுத்தந்துள்ளன. 1987- 88க்கான மாநில நல்லாசிரியர் விருதையும் பாராட்டிதழையும் பரிசையும் பெற்றுத் தந்துள்ளன.  மேலும் பல பரிசுகளையும் பாராட்டுகளையும் இவர் பெறுவார் என்பது உறுதி. அறிமுகவுரை   25.1.1989    
தமிழக வரலாற்றின் காலக்கணிப்பு மேதை குடந்தை அறிஞர் என். சேதுராமன் அவர்கள்
....மேலும் நண்பர் தாமைரக்கண்ணன் அவர்களைப் பற்றி எழுதும் போது மனம் மகிழ்ச்சி கொள்கிறது. மனிதர் வாழ்க்கையில் பலர் வருவர்; இணைவர்; திரும்பவும் சென்று விடுவர்.
ஒரு சிலர்தான் இலக்கிய வாழ்க்கையோடு கடைசிவரை இணைந்து இருப்பர். அவ்வாறு இருப்பவர்களுள் தலையானவர் திரு. தாமரைக்கண்ணன் ஆவார். நட்பு, இலக்கியம் இவற்றிற்காகவே நல்லுள்ளத்துடன் பழகும் யாரும், தாமரைக்கண்ணன் அவர்களுடன் பழகிய பின் அவரை விட்டு விலகிச் சென்று விட முடியாது. அவரும் விலகிச் செல்வதில்லை. காரணம், அவரது நட்பு பலன் கருதா நட்பு! தன்னலமில்லாத தூய்மையான நட்பு! யாரும் தாமரைக்கண்ணன் அவர்களின் இனிய நட்பையும், களங்கமற்ற உள்ளத்தையும் விட்டுப் பிரிந்து செல்ல முடியாது. தாமரைக்கண்ணன் யாரிடமும் வெறுப்புக் கொள்ளாத ஒரு மனிதர்; எல்லோரிடமும் அன்புடன் பழகும் தன்மையர்; எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர்; அவரைப் பார்த்தாலே நம் கவலைகள் நம்மை விட்டு ஓடிவிடும்! இவர் மிகச் சிறந்த ஆன்மிகவாதி அன்னை ஆதிபராசக்தியின் அருளைப் பெற்றவர். பல சமயங்களில் அண்ட சராசரங்களையும் கடந்து பரவெளியில் கலந்து வாழ்பவர். கனவுகளை ஆய்ந்து, எதிர்காலத்தினைக் கணிக்கும், ஆற்றல் பெற்றுள்ளவர். இவர் கண்டுள்ள பல கனவுகள், கற்பனைகளுக்கும் ஏன்..... இயற்கை விதிமுறைகளுக்கும்கூட அப்பாற்பட்டவை அவற்றைக் கேட்கும்போதே ஓர் உண்மையான ஆன்மீகவாதி இவ்வுலகை மறந்து போவான்!ஆன்மிக பலம் முழுவதும் வாய்க்கப் பெற்ற இவர், உலகியலில் ஈடுபட்டு ஆசிரியர் தொழில்புரிகின்றார்,தாய்மொழியான தமிழ்மொழிக்கு இவர் பல துறைகளிலும் ஆற்றிவரும் தொண்டுகள் ஏராளம். இவருடைய நூல்கள் ஒவ்வொன்றும் மனித சமுதாயத்திற்கு அறநெறியைப் போதிக்கிறது, நல்வழி காட்டுகிறது; தன்னம்பிக்கை ஊட்டுகிறது; ஆன்மிக வலிமையை ஆழ்மனதில் பதிக்கிறது. தாமரைக்கண்ணன் அவர்களின் தமிழ்ப் பணிகளில் என்னை அதிகம் கவர்ந்தது, அவருடைய கல்வெட்டு ஆராய்ச்சிப் பணிகளே! தமது சொந்தச் செலவில், சுமார் முப்பதாயிரம் ரூபாய் இழப்பில், கடந்த பதினான்கு ஆண்டுகளாக இவர் கண்டுபிடித்துள்ள கல்வெட்டுகளும் செப்பேடுகளும் காசுகளும் தமிழக வரலாற்றுக்குப் புத்தொளி தருபவை. தமிழ் வட்டெழுத்தில் காணப்பெறும் இந்தளூர் கோழி நடுகல்லக் கண்டறிந்து. இவர் எழுதிய ஆராய்ச்சிக்கட்டுரை, தொல்பொருள் துறையில் இவருக்குப் பெயரும் புகழும் ஈட்டித் தந்தது. மற்றும் வீரகேரளன் காசு, கன்னரதேவனின் கல்வெட்டு முதலியவை அப் புகழை மேலும் வளர்த்தன. தொடர்ந்து இவர் கண்டறிந்துள்ள புதிய புதிய கல்வெட்டுகளும், அவற்றைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளும் மிகச் சிறப்பானவை. அண்மைக் காலத்தில் இவர் கண்டுபிடித்துள்ள புத்திரன்கோட்டை பாண்டியர் கல்வெட்டுகளும் கீழ்சேவூர் கல்வெட்டுகளும் தெலுங்கு கல்வெட்டுகளும் அற்புதமானவை. தாமரைக்கண்ணனின் அரிய முயற்சிகளும் ஆய்வுகளும் தமிழக வரலாற்றில் சிறந்த இடம் பெறத்தக்கவை. பல சந்தர்ப்பங்களில் நானும் அவரும் புதிய கல்வெட்டுக்களைக் கண்டு பிடித்து உள்ளோம். கல்வெட்டு ஆராய்ச்சி சம்பந்தமாக எனக்கும் திரு. தாமரைக்கண்ணன் அவர்களுக்கும் நிறைய தொடர்பு உண்டு. நேரிலேயோ அல்லது கடிதம் மூலமாகேவா ஆய்வின் இன்பத்தைச் சுவைப்போம்! ஒரு சமயம் சென்னையிலிருந்து காரில் வந்து கொண்டு இருந்தேன். அச்சிறுப்பாக்கத்தில் பாதை ஓரமாக உள்ள ஒரு கடையில் நின்று கொண்டிருந்தார். காரை நிறுத்தி ‘வணக்கம்’ சொன்னேன். ‘வாருங்கள் வாருங்கள்’ என்று அன்புடன் அழைத்தார். சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்து விட்டு அவரை என்னுடன் காரில் அழைத்துச் சென்றேன். சாரம் என்ற ஊர் வந்தவுடன் காரை நிறுத்தி, அந்த ஊர் சிவன் கோயிலுக்கு அவரை அழைத்துச் சென்றேன். நிருபதுங்கவர்மனின் கல்வெட்டைப் பார்த்ததும் ஆனந்தம் கொண்டார். மூன்றாம் குலோத்துங்கரின் கல்வெட்டைப் பார்த்துக் கண்கலங்கினார். பிறகு என்ன? புகைப்படங்களுடன் சாரம் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையை அடுத்த வாரமே ‘தினமணி’ சுடரில் வெளியிட்டார். இவ்வாறு இவர் உடனுக்குடன் வெளியிட்டுள்ள கல்வெட்டு ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஏராளம்.... ஏராளம். 1983 மே மாதத்தில் குடந்தை அருகில் உள்ள தாராசுரத்தில் விழா ஒன்று நடத்தினேன். அவ்விழாவில் சோழர் வரலாறு பற்றிய அரிய செய்திகளை அவருக்கே உரிய பாணியில் தாமரைக்கண்ணன் வெகு அழகாக எடுத்துக் கூறினார். திரு தாமரைக்கண்ணன் முத்தமிழில் வல்லவர்; தமிழுக்கு அவர் செய்திருக்கும் தொண்டு மகத்தானது. இன்னும் பல காலம் வாழ்ந்து திரு தாமரைக்கண்ணன் தமிழுக்குத் தொண்டாற்ற இறைவனை இறைஞ்சுகின்றேன். அறிமுகவுரை 31.1.1989    
....மேலும்சான்றோர்க்குச் சான்றோர் காந்தமலைச் செம்மல கி. வா. ஜகந்நாதனார் அவர்கள்
செந்தமிழ்க் காத லோடு
தெய்வத்தின் பாலே அன்பும்
சந்தமுற் றமையும் நின்றன்
தகவினைப் போற்று கின்றேன்!
கந்தவேல் அருளால் மேன்மேற்
கல்வியும் பொருளும் பெற்று
முந்துறு புகழும் ஓங்க
நலமெலாம் முயங்கி வாழ்க!!
வாழ்த்து மடல் 10.5.1967
‘தினமணி சுடர்’ முன்னாள் ஆசிரியர் செந்தமிழ் வேதியர் சே. இராமாநுஜாசாரியார் அவர்கள்
....மேலும் திரு தாமரைக்கண்ணன், 1976 முதல் தினமணி சுடர் கட்டுரைகள் மூலம் எனக்கு அறிமுகமானவர்.
அக் கட்டுரைகளில் அவர் ஆய்வுத் திறன் மட்டுமின்றி,தெய்வ நெறியிலும் அதற்குத் துணை நின்ற பண்டைய அரசர்கள், வள்ளல்கள் திறந்தும் அவர் காட்டிய ஆர்வம் நன்கு வெளிப்பட்டது. தம் பெயருக்கேற்ப திருமால் நெறியில் அவர் கொண்ட தனித்த ஈடுபாடு என்னை அவர்பால் ஈர்த்தது தமிழும் வைணவமும் வளர, அவர் பல்லாண்டு வாழ்ந்து பணிபுரிய திருமால் திருவரருளை வேண்டிநிற்கிறேன். 26.03.1989
வண்ணத்தமிழால் வையம் ஆளும் இலக்கியச்சித்தர் டாக்டர் வலம்புரி ஜான் அவர்கள்
....மேலும் கவிஞராகவும் கலைஞராகவும் விளங்குகின்ற தாமரைக்கண்ணனின் ‘கம்பாஸ்பி’ என்கிற காவியம் இதோ என் கண்களைக் கெளரவப் படுத்துகிறது. புலவர் அவர்களின்
நாத நயனங்களில் நான் சூரிய சந்திரர்களைச் சந்தித்தேன். இவருக்கு வாய்த்திருக்கிற எழிற் கண்கள், கனவுகன் மிதக்கின்ற கற்பனை ஓசைகள் மாத்திரம் அல்ல; எதிர் காலத்தை எடை போட்டுச் சொல்லுகிற பேரண்டப் பெருவெளிகளும் ஆகும். ஆறே காட்சிகளில் மங்கலமாக மடிந்து போன கிரேக்கத்தை மனத்தேர் ஏற்றி மயங்க வைக்கிறார் என்றால், இவரது வித்தக விரல்கள் வீரவணக்கத்திற்கு உரியன அன்றோ?..... உயிரோவியமான காதலைக் கனிந்த தமிழில் காவியமாக்கி இருக்கிறார். புலவர் தாமரைக்கண்ணனன் தமிழ்நாடக உலகத்தின் புலர் காலைப் பொழுது! சீர்திருத்த சிறுகதையாளராய், நாட்டுக்கு நல்லதை உணர்த்தும் நாவல் ஆசிரியராய், குதூகலத்தோடு கொஞ்சும் குழந்தை எழுத்தாளராய் நன்மணி நாடக கால்ஊன்றி கனவில் தலை நிமிரும் அறிஞர் டாக்டர் தாமைரக்கண்ணன் அகிலத்தை வென்றுவாழ்க! ‘கம்பாஸ்பி’ அணித்துரை 28.7.1985
தொல்பொருள் துறையின் தன்னேரிலா பேரறிஞர் டாக்டர் இரா. நாகசாமி அவர்கள்
....மேலும் திரு. தாமரைக்கண்ணன் அவர்களை எம்மிடம் கல்வெட்டுப் பயிற்சி பெற வந்த நாள் முதல் அறிவேன் அன்றிலிருந்து இன்று வரை வரலாற்றில் இயல்பான ஆர்வத்துடன்
பணியாற்றி வருகிறார். இவரது ஆர்வத்தால் தமிழ் வரலாற்றுக்கு மிகவும் போற்றத்தகும் சிறப்புச் செய்திகள் கிடைத்துள்ளன.
இவரது புதிய கண்டுபிடிப்புகளில் தமிழகமே பெருமைப்படக் கூடியது, சுமார் 1500 ஆண்டுகட்கும் முன்னரே ஒரு கோழிக்கு எடுத்த நினைவுக் கல்லை இவர் வெளிப்படுத்தியது ஆகும். அக்கோழியின் உருவத்துடன் பெயரும் பொறிக்கப்பட்டு இருந்த கல்வெட்டு இவரை பாராட்டிக் கொண்டிருக்கும். அது மட்டுமல்ல..... அதில் உள்ள சொற்றொடர் பண்டைய தமிழ் இலக்கணத்தில் இடம் பெற்றுள்ளது என்று இவர் ஆராய்ந்து வெளிப்படுத்தியது மேலும் சிறப்பாகும்.
இது மட்டுமல்ல..... இப்பகுதியில் கிடைத்த வீரகேரளன் காசு பற்றியும், ஒரத்தி எனும் ஊரில் தந்திவர்மன், கன்னரேதவன் ஆகிய அரசர் கல்வெட்டுகளும் கண்டுபிடித்து உதவியிருக்கிறார். ..... அரியவற்றைக் கண்டுபிடிப்பவராகவும், ஆராய்ச்சியாளராகவும் விளங்கும் இவர், நல்ல பேச்சாளர் பல நூல்களை யாத்துச் சிறந்து வருகிறார்..... இவர் எழுதியுள்ள ‘வரலாற்றுக் கருவூலம்’ நூலின் பயனாய் இப்பகுதியின் வரலாற்றை, புகழ் வாய்ந்த கோயில்களின் சிறப்பை, இதுகாறும் யாரும் அறியாத கோயில்கள் பற்றிய செய்தியைத் தெளிவாகவும் எளிமையாகவும் சான்றுகளுடன் அறிய அயலும். இவர் இது போன்ற பல நூல்களை எழுதிச் சிறப்படைய இறைவனை வேண்டுகிறேன். ‘வரலாற்றுக் கருவூலம்’ அணி ந் துரை 25.12.1984
நடமாடும் பல்கலைக் கழகம் சொல்லின் செல்வர் டாக்டர் ஒளவை நடராசனார் அவர்கள்
....மேலும் நண்பர் தாமரைக்கண்ணனார் ஒரு நல்லாசிரியர்; பலதுறைப் புலமை பெற்று மிளிர்பவர்; படைப்பாற்றல் மிக்க பல்கலைக்குரிசில்! சொல்வரவு சான்ற தமிழுக்குத்
துறை தோறும் புது வரவு பெருக்கி வரும் புகழாளர்! இவரின் படைப்புகள் வளர்கின்ற இளைய நெஞ்சம் முதல் அறிஞர்களின் ஆராய்ச்சி உள்ளம் வரை இடம் பெற்று விளங்கும் திறங் கொண்டு திகழ்பவை! பல்துறைப் பணிகளிலும் நாடகப் படைப்புகள் இவர் புலமைப் புகழுக்கு ஏணியாகும்! இவர் தமிழக அரசின் 1982-ஆம் ஆண்டின் தலை சிறந்த நாடகப் பேராசியர் என்ற பாராட்டுதலையும் பெற்றுள்ளார். இந்த நாடகத்தில் ஆசிரியரின் கைவண்ணம் உள்ளத்தைத் தொடுகின்ற நிகழ்ச்சிகளை மேலும் கவினுறச் செய்கிறது. எளிமையும் இனிமையும் குலவும் தமிழ் நடை எங்கும் சுடர் விடுகிறது..... தாமரையின் பணி மேலும் சிறக்கவும் புதிய பொன்னேடுகள் பல அவர் புகழுக்குச் சேரவும் எனது உளங்கனிந்த நல் வாழத்துக்கள்! 25.7.1985
1   |  2