தென்னார்க்காடு மாவட்டம், திண்டிவனம் வட்டத்திலுள்ள ஆட்சிப்பாக்கம் என்னும் சிற்றூரில் (01.07.1934) பிறந்தேன். என் தந்தையார் திரு.மா. வீராசாமி.தொடக்கப்பள்ளி தலைமையாசிரியராகப் பணியாற்றினார். என் தாயார் திருமதி.வீ. பாஞ்சாலி அம்மாள். அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது.

படிப்பு

என் தந்தையார் பணியாற்றிய காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், சிறுமயிலூர், தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்புவரை பயின்றேன். சூனாம்பேடு, உயர் தொடக்கப் பள்ளியில் ஆங்கிலம் இல்லாத எட்டாம் வகுப்பு (ஈ.எஸ்.எல்.சி) வகுப்புவரை பயின்றேன். அப் பள்ளி ஆசிரியர்களில் திருவாளர். நரசிம்மாச்சாரியார், திருவாளர் .கன்னியப்பன் ஆகிய இருவரும் என் கல்வித் தகுதி கண்டு பாராட்டி ஆர்வமூட்டினார்கள். அந்த ஆசிரியர் இருவரையும் இன்றும் போற்றி வணங்குகிறேன். சென்னை முத்தியால் பேட்டை, பவழக்காரத் தெருவில் இருந்த ஏ. இராமானுஜம் செட்டியார் உயர் தொடக்கப் பள்ளியில் மீண்டும் எட்டாம் வகுப்பில் என் தந்தையார் சேர்த்தார். சென்னைப் பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியில் 1949/50- இல் ஒன்பதாம் வகுப்பு படித்தபோது, சென்னையில் டிராம் வண்டிகள் ஓடிக் கொண்டிருந்தன. பச்சையப்பன் பள்ளிக்கு வர வண்டிக்கட்டணம் அரையணா மூன்று புதுக்காசுகள். நாள் தோறும் டிராம் வண்டிக்காகக் கொடுக்கப்படும் அரையணாவைச் சேர்த்து, குழந்தைகள் பத்திரிகைகள் வாங்கிப் படிக்கும் பழக்கத்தை மேற்கொண்டேன். இதழ்களைப் படித்துக் கொண்டே பள்ளிக்கு நடந்தே செல்வேன். நடந்து கொண்டே படிக்கும் அந்த இளமைப் பழக்கம் இப்போதும் என்னிடம் உள்ளது. வாரந்தோறும் ‘சுதேசமித்திரன்’ இதழை வாங்கிப் படிப்பதில் பேரார்வம் கொண்டிருந்தேன். அறிஞர் அண்ணா முதலிய மறுமலர்ச்சி அறிஞர்களின் சொற்பொழிவுகள் எங்கு நடந்தாலும் நண்பர்களுடன் நடந்து சென்றே கேட்பேன். அதுவே, இலக்கிய அறிவு விதை என் உள்ளத்தில் ஊன்றப்பட்டகாலம். குமுதம், தமிழ்மணி, போர்வாள் முதலான இதழ்களைத் தொடர்ந்து படித்தேன். எழுத்தார்வம் கிளை விட்டது. ‘ பனித்திரை’ என்னும் முழு நாடகத்தை வெண்மாலகரம் ஆற்றங்கரையில் அமர்ந்து ஒரு திங்களில் எழுதி முடித்தேன்.

ஆசிரியர் பயிற்சிப் பள்ளி

1952-54 ஆகிய இரண்டு ஆண்டுகள் செங்கற்பட்டு மாவட்டம் திருவள்ளூர் அருகில் உள்ள திருவூர் அரசினர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் இளநிலை ஆசிரியர் பயிற்சி (Junior Grade Teacher) பெற்றேன் .

ஆசிரியர் பணி
நான் 06.09.1954இல் செங்கல்பட்டு மாவட்டம் பொன்னேரி மாவட்டக் கழகக் கலப்புப் பள்ளியில் (District Board Mixed School) ஆசிரியர் பணி ஏற்றேன். அங்கு பணியாற்றியபோது, என்னுடைய பேச்சாற்றலும் வடிவமைந்து வெளிப்பட்டன. சென்னையிலிருந்து வெளிவந்த ‘செளபாக்கியவதி’ அரசு இதழில்முதன்முதலாக ‘மங்கையர்கரசிக்கு’ எனும் கட்டுரையும், ‘தமிழன் புரட்சி’ என்ற இதழில் ‘செவ்வாய்க்கிழமை’ என்ற சிறுகதையும் அச்சில் வெளிவந்தன. ஓரங்க நாடகங்களும்,முழு நேரப் பெரிய நாடகங்களும் ‘ஆரம்பக் கல்வி’ என்னும் மாத இதழில் தொடர்ந்து சுமார் பத்து ஆண்டுகள் எழுதினேன். ‘ஆரம்பக்கல்வி’யால், தி.மு.க.வின் பெருந்தலைவர்களுள் ஒருவரான திரு.காஞ்சி மணிமொழியாரின் திருமகனார் கட்டுரைச் செல்வர் பேராசிரிரியர் மா.இளஞ்செழியனார் அவர்களின் நட்பும், அன்பும், அரவணைப்பும் எனக்கு கிடைத்தன. 20.01.1957இல் காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தைச் சார்ந்த கொங்கரை மாம்பட்டு என்னும் கிராமத்தில் பணியாற்றிய காலத்தில் ஆரம்பக் கல்வி, பிரசண்ட விகடன், ஆனந்தவிகடன், குமுதம், போர்வாள், காதல், காஞ்சி, அமுதசுரபி, உமா, உலகம், தினத்தந்தி, மாலைமுரசு முதலான இதழ்களிலும், சென்னை வானொலியிலும் ஏராளமான சிறுகதைகளையும் நாடகங்களையும் எழுதினேன். ஆசிரியராகப்பணியாற்றிய காலத்தில் (1960 இல்) எஸ்.எஸ்.எல்.சி யும், 1961 இல் இடைநிலை ஆசிரியர் தேர்வும் (Secondary Grade) எழுதித் தேர்ச்சியுற்றேன். படிப்படியாகப் புகுமுகத் தேர்வு, இடைநிலைத் தேர்வு, இறுதிநிலைத் தேர்வு ஆகியவற்றை எழுதி 1965 இல் புலவர் ஆனேன். 20.07.1965 இல் மதுராந்தகம் வட்டம், ஒரத்தி உயர்நிலைப் பள்ளியில் இரண்டாம் நிலைத் தமிழாசிரியராகச் (Grade II Pandit) சேர்ந்து, பதவி உயர்வு பெற்று 04.07.1966 முதல் 03.01.1967 வரை மதுராந்தகம் வட்டம், கூவத்தூர் அரசு உயர் நிலைப் பள்ளியில் முதல் நிலைத் தமிழாசிரியராகப் பணியாற்றினேன்.

பட்டப் படிப்புகள்
எழுத்துப் பணிகள், பட்டிமன்றங்கள், இலக்கியச் சொற்பொழிவுகள், கல்வெட்டு ஆராய்ச்சிப் பணிகள் ஆகியவற்றின் இடையே, 1980 அக்டோபரில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பி.லிட். தேர்வும் 1983 டிசம்பரில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பி.எட். தேர்வும் . 1984 நவம்பரில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ (தமிழ்) தேர்வும்1990 செப்டம்பரில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எம்.எட். தேர்வும் எழுதித் தேர்ச்சி பெற்றேன். பாண்டிச்சேரிப் பல்கலைக் கழகத்தில் முனைவர் (P.hd.,) பட்டமும் பெற்றேன்.. 04.01.1967முதல் அச்சிறுபாக்கம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து மீண்டும் அதே பள்ளியில் பதவி உயர்வு பெற்று 25.7.91 முதல் முதுகலைத் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றேன்.

திருமணம்
1958 சூலைத் திங்கள் 4ஆம் நாள் நான் விரும்பிய மங்கை நல்லாள் எம். பத்மாவதியை என் தந்தையின் தலைமையிலேயே திருமணம் புரிந்து கொண்டேன். என் திருமணத்திற்குப் பெரிதும் உறுதுணையாக இருந்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் குடும்பத்தையும், என் அத்தையார் மங்கைநாயகி அம்மையாரையும் நன்றியுடன் நினைவு கூர்கிறேன். என் மனைவியை 1962-64இல் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பள்ளியில் படிக்க வைத்து ஆசிரியை ஆக்கினேன். தந்தையார் எனக்கு இராசமாணிக்கம் என்று பெயர் வைத்தார். அன்னையார் ‘ஜானகிராமன்’ என்றும் ‘கண்ணன்’ என்றும் அழைப்பார்கள். நான் பத்மாவதியை என் உயிரினும் மேலாக விரும்புவதால், அவள் பெயரை (பத்மம்: தாமரை) என் அன்னையார் அழைக்கும் பெயரோடு இணைத்துத் தாமரைக்கண்ணன் என்னும் புனைபெயர் வைத்துக்கொண்டேன்! பெற்றோரால் உயர்ந்த குணங்களும் அறிவும் ஆற்றலும் பெற்றேன். மனைவியால் வாழ்க்கையில் பேரும் புகழும் பெற்றேன். ஆம்! நான் எழுதிய ஆயிரக் கணக்கான பக்கங்களை நல்ல கையெழுத்தில் படியெடுத்துக் கொடுத்து, இலக்கிய முயற்சிகளுக்குத் தடை கூறாமல் ஊக்கமளித்த என் மனைவியின்பெயரை என் பெயரோடு இணைத்துக் கொண்டதில் எனக்குப் பெருமகிழ்ச்சியே!

என் பிள்ளைகள்
தாமரை. புகழேந்தி A.M.I.E., (09.09.1960).
தாமரை. மணிவண்ணன் M.A., (05.09.1963).
தாமரை. கோப்பெருந்தேவி M.A., M.Ed., (12.05.1965)
தாமரை. செம்மேனியன் D.M.E., M.C.A.,(14.11.1967)
தாமரை. திருமேனியன் B.F.A., (11.01.1975)

இலக்கியப் பொதுப் பணிகள்
‘சங்கப் பலகை’ என்னும் இலக்கியச் சுழல் அமைப்பை நிறுவி எழுத்தாளர்களுக்குப் பாராட்டும் பட்டங்களும் வழங்கியுள்ளேன். தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகவும் ,அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செங்கை அண்ணா மாவட்டத்தின் கிளைத்தலைவராகவும் பணியாற்றினேன்.

எழுத்துப் பணி
தமிழக நாள், வார, திங்கள் இதழ்களிலும், சென்னை, புதுவை, திருச்சி வானொலிகளிலும், தொலைக்காட்சிகளிலும் கல்வி ஒளிபரப்பு நிகழ்ச்சிகள்..... முந்நூற்றுக்கு மேற்பட்ட நாடகங்கள்..... நடித்து, இயக்கியவை முப்பது நாடகங்கள்..... தினமணிசுடர், தினமலர், அமுதசுரபி, தேவி ஆகிய இதழ்களில் கல்வெட்டு ஆய்வுக் கட்டுரைகள், சிறுகதைகள், தொடர்கதைகள், நாவல்கள், நாடகங்கள் மற்றும் ஐநூறு நூல்களுக்கு மேல் எழுதப்பெற்ற மதிப்புரைகள்…