
தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம் ,செய்யூர் வட்டம் ,
ஈசூர் என்னும் ஊரிலிருந்து பல்லவர் கால விஷ்ணு மற்றும் தாய்மார் எழுவரில் ஒருவரான மாகேசுவரி சிற்பங்களையும் , நெற்குன்றத்திலிருந்து சமணத் தீர்த்தங்கரர் சிற்பத்தையும், வெண்மால் அகரத்திலிருந்து பிற்காலச் சோழர்காலத் திருமால்,தேவி,பூதேவிச் சிற்பங்களையும் கண்டுபிடித்துள்ளது.
மேற்காணும் நிறுவன அமைப்பாளர்கள் பல்கலைச் செல்வர் தாமரைக்கண்ணன்,
நடன காசிநாதன்,முத்து எத்திராசன் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வுப் பணியின் போது இவை இருப்பது தெரியவந்தது.ஈசூர், தொழுப்பேட்டிலிருந்து 11 கி.மீ., தொலைவில் தென்கிழக்கு திசையிலும் ,சூணாம்பேட்டிலிருந்து வடமேற்குத் திசையிலும் அமைந்துள்ளது.முன்பொருமுறை இவ்வூர் குளத்திலிருந்து சோழர் காலத்திய சில செப்புத் திருமேனிகளும்
கண்டெடுக்கப்பட்ட்டிருக்கின்றன. தற்போது இவ்வூரின் தெற்குத் திசையில் உள்ள செம்பாத்தம்மன் கோயில் என்று வழங்கப்பெறும் இடத்திலிருந்து பலாவர் கால அரிய விஷ்ணு சிற்பம்
கண்டறியப்பட்டிருக்கிறது.
இச்சிற்பம் மாமல்லபுரம் ஆதிவராகக் குடைவரைக் கோயில் புடைப்புச் சிற்பங்களின்
கலைபாணியில் தோற்றம் தருகிறது. ஆதலால் இது கி.பி.,7ம் நூற்றாண்டைச் சார்ந்தது என்று
திடமாகக் கூறலாம். இடது காலை இருக்கையில் குத்திட்டு வைத்து, வலக்காலைத் தொங்கவிட்ட நிலையில் கொண்டு இடக்கரத்தில் மலர் ஏந்தி வலக்கரத்தால் ஆசனத் தொட்டவாறு அமர்ந்த நிலையில் காட்சி தரும் மாகேசுவரியும் இதே காலத்தைச் சேர்ந்ததாகும்.
இச்சிற்பங்களுக்கு அருகில் பல்லவர் காலத்திய மற்றொரு நிற்கும் திருமால் சிற்பமும் ,நாயக்கர் கால குறுநிலத்தலைவன், தலைவி புடைப்புச் சிற்பங்களும் காணப்படுகின்றன.திருமாலின்
தலைப்பகுதி உடைந்து, காணப் பெறாத நிலையிலுள்ளது.
தொழுப்பேட்டிலிருந்து 8 கி.மீ., தொலைவிலுள்ள நெற்குன்றம் என்ற ஊரில் உள்ள தீர்த்தங்கரர் சிற்பம்,இருகால்கலையும் மடக்கி ஒன்றன் மீது ஒன்றாகப் பிணைந்து வைத்து யோகாசன நிலையில் அமர்ந்து காணப்படுகிறது.இருகரங்களின் உள்ளங்கைகளையும் ஒன்றன் மீது ஒன்றாக வைத்து , கண் இமைகளை மூடி ஆழ்ந்த தியான நிலையில் இருப்பதாகக் காட்டப்பெற்றிருக்கிறது.
தீர்த்தங்கரின் இருபக்கங்களிலும் பக்கத்தொருவராக யஷர் நிற்கும்,நிலையில் முனிவரைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தீர்த்தங்கரின் தலைக்கு மேலே முக்குடையும்,முக்குடைக்கு இருபுறத்திலும் பக்கத்துக்கொருவராக கந்தவர்களும்,தலைக்குப் பின்புறம் திருவாசியும்
காணப்படுகின்றன. இச்சிற்பம் ஆயிரத்து 200 ஆண்டிகளுக்கு முற்பட்டதாகலாம்.
வெண்மால் அகரம், தொழுப்பேட்டிலிருந்து 7 கி.மீ., தொலைவில் உள்ள சிற்றூராகும். இவ்வூரின் மேற்குக் கோடியில் ஒரு மேட்டுப் பகுதியில் திருமால்,தேவி,பூதேவி ஆகியோரின் சிற்பங்கள் உள்ளன.இவை பிற்காலச் சோழர் கலைப் பாணியில் மிகவும் நேர்த்தியாக
வடிக்கப்பட்டிருக்கின்றன.இச்சிற்பங்கள் காணப்பெறும் இடத்தில் முன்பு கோயில் ஒன்று அமைந்திருக்க வேண்டும் போன்று தெரிகிறது.
தொண்டை மண்டலம் பழமையானச் சிற்பங்களின் தொட்டில் என்று கூறுமளவிற்கு
அடுத்தடுத்துப் பல அரிய சிற்பங்கள் அண்மைக் காலங்களில் இந்நிறுவனத்தால்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தினமலர் 3.4.2000