என்னினிய நண்பர் இதயத்துள் என்றமுளரர்;
மன்னிய நட்பின் பிசிராந்தை - கன்னியிளம்
செந்தமிழ்போல் நல்லுணர்வும், செங்கனிபோல் வாயுரையும்
சொந்தமெனக் கொண்டிட்டார் சேர்ந்து.
ஆய்வறி வென்னும் அகல்வான் பரப்பினிடை
தேய்வறியா தண்மதியாய்த் தோன்றியொரிர் - தூய்மைமிகு
நற்படைப்பின் நாயகராம் நற்றமிழ்க்கோர் எல்லையெனும்
நற்றா மரைக்கண்ண னார்
மதுவூறும் சொன்னடையும், மாண்புடைய நோக்கும்
புதினம் சிறுகதையாய்ப் பூக்க - விதவிதமாய்த்
தீட்டிய யாவுமே தீமைகளை வீழ்த்துகின்ற
ஈட்டியாய்ப் பாய்ந்திடுதே ஈங்கு.
நா(டு) அகம் கொண்டே நலிவற்ற நன்முறையில்
நாடகங்கள் பற்பலவும் நற்றமிழ்தான் - பீடுறவே
செய்தும், நடித்தும், செழுமையுற நற்கருத்தைப்
பெய்தும் வரும்பனியைப் போற்று.
எத்துறையைத் தொட்டாலும் அத்துறையை மாண்புறுத்திப்
புத்துறையாய் மாற்றுமிவர் போக்குணர்ந்தோர் - முத்தமிழின்
வித்தகர் என்றும், விழுத்தமிழ் நற்கடலில்
முத்தெடுக்கும் மேதையென்பர் மூண்டு.
தேனூறும் பேச்சும், தெளிவூட்டும் நற்கருத்தும்,
வானூறும் வெண்மதியின் தண்ணியல்பும் - பாநூறாய்
நீளும் இலக்கியம் போல் நெஞ்சினிக்க வாழுமிவர்
நாளும் புகழுறுக நீடு.
மதுராந்தகம் ‘மாநில நல்லாசிரியர் விருது’
நவம்பர் 1988 பாராட்டு விழா
தொல்கலையைத் துலக்கமுறச் செய்யுந் தொண்டு
தூய்தமிழ்க்குத் துறைபலவும் சேர்க்கும் நோக்கும்
சொல்விலைக்கு விற்றெழுதும் சில்லோர் போன்று
சோரம்போம் இழிதகைமை அறியாப் போக்கும்
வில்வளைவு விரோதிகளை வீழ்த்து மாபேல
வண்டமிழின் பகையழிக்கும் வரை நெஞ்சும்
பல்சுவைநற் செம்மலெனும் பட்டங் கொண்ட
பண்பாளர், முனைவரவர் தாமரைக் கண்ணர்!
வரலாறு தன்னையே திருப்பிக் காட்டும்
என்றுரைத்த வாசகத்தை மெய்ம்மை யாக்கும்
வரமாக வண்டமிழ்க்கு வந்து தித்தார்;
வளமான மொழிப்புலமை, ஆய்வும் மிக்கார்.
உரமாகும் ஒண்டமிழக்குப் படைப்பு யாவும்,
உணர்வூட்டும் தமிழர்க்கே எழுத்தும் பேச்சும்.
கரம்செய்யும் பணியெல்லாம் தமிழ்க்கே ஆகும்;
கருதுமுள நினைப்பெல்லாம் உயர்விக் காமே!
பாடுமிகப் பட்டமைக்கும் பாங்கில் ஆன
பாராட்டுக் குரியதெனும் நாட கங்கள்
ஈடுமெடுப்(பு) அற்றிலங்கப் படைத்துக் காட்டி,
இணையற்ற நாடக்ப்பே ராசான் என்றே
நாடு இவரைப் பாராட்ட, விருதும் பெற்றார்;
நற்றமிழ்க்குப் புதுப்பொலிவைப் பெரிதும் தந்தார்.
ஏடமைந்த பால்சுவைபோல் இனிப்பைச் செய்யும்
இக்காலச் சேக்ஸ்பியெரன் றியம்ப லாமே!
பூந்தென்றல் இளவேனிற் பருவந் தன்னில்
பொன்னுடலைத் தழுவுகின்ற பான்மை போன்றும்,
மாந்தளிரைக் கொத்தியுண்டு மகிழ்வைக் கொண்டு
மணிக்குரலால் குயிலிசைக்கும் சுகமே போன்றும்,
இதயத்தை ஈர்த்தின்பம் செய்தல் போன்றும்,
தீந்தமிழால் படைக்கின்ற படைப்பு யாவும்
தெள்ளமுதச் சுவையூட்டத் துய்த்தோம் யாமே!
(வேறு)