நண்பர் தாமைரக்கண்ணன் அவர்களைப் பற்றி எழுதும் போது மனம் மகிழ்ச்சி கொள்கிறது. மனிதர் வாழ்க்கையில் பலர் வருவர்; இணைவர்; திரும்பவும் சென்று விடுவர்.
ஒரு சிலர்தான் இலக்கிய வாழ்க்கையோடு கடைசிவரை இணைந்து இருப்பர். அவ்வாறு இருப்பவர்களுள் தலையானவர் திரு. தாமரைக்கண்ணன் ஆவார். நட்பு, இலக்கியம் இவற்றிற்காகவே நல்லுள்ளத்துடன் பழகும் யாரும், தாமரைக்கண்ணன் அவர்களுடன் பழகிய பின் அவரை விட்டு விலகிச் சென்று விட முடியாது. அவரும் விலகிச் செல்வதில்லை. காரணம், அவரது நட்பு பலன் கருதா நட்பு! தன்னலமில்லாத தூய்மையான நட்பு! யாரும் தாமரைக்கண்ணன் அவர்களின் இனிய நட்பையும், களங்கமற்ற உள்ளத்தையும் விட்டுப் பிரிந்து செல்ல முடியாது. தாமரைக்கண்ணன் யாரிடமும் வெறுப்புக் கொள்ளாத ஒரு மனிதர்; எல்லோரிடமும் அன்புடன் பழகும் தன்மையர்; எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர்; அவரைப் பார்த்தாலே நம் கவலைகள் நம்மை விட்டு ஓடிவிடும்! இவர் மிகச் சிறந்த ஆன்மிகவாதி அன்னை ஆதிபராசக்தியின் அருளைப் பெற்றவர். பல சமயங்களில் அண்ட சராசரங்களையும் கடந்து பரவெளியில் கலந்து வாழ்பவர். கனவுகளை ஆய்ந்து, எதிர்காலத்தினைக் கணிக்கும், ஆற்றல் பெற்றுள்ளவர். இவர் கண்டுள்ள பல கனவுகள், கற்பனைகளுக்கும் ஏன்….. இயற்கை விதிமுறைகளுக்கும்கூட அப்பாற்பட்டவை அவற்றைக் கேட்கும்போதே ஓர் உண்மையான ஆன்மீகவாதி இவ்வுலகை மறந்து போவான்!ஆன்மிக பலம் முழுவதும் வாய்க்கப் பெற்ற இவர், உலகியலில் ஈடுபட்டு ஆசிரியர் தொழில்புரிகின்றார்,தாய்மொழியான தமிழ்மொழிக்கு இவர் பல துறைகளிலும் ஆற்றிவரும் தொண்டுகள் ஏராளம். இவருடைய நூல்கள் ஒவ்வொன்றும் மனித சமுதாயத்திற்கு அறநெறியைப் போதிக்கிறது, நல்வழி காட்டுகிறது; தன்னம்பிக்கை ஊட்டுகிறது; ஆன்மிக வலிமையை ஆழ்மனதில் பதிக்கிறது. தாமரைக்கண்ணன் அவர்களின் தமிழ்ப் பணிகளில் என்னை அதிகம் கவர்ந்தது, அவருடைய கல்வெட்டு ஆராய்ச்சிப் பணிகளே! தமது சொந்தச் செலவில், சுமார் முப்பதாயிரம் ரூபாய் இழப்பில், கடந்த பதினான்கு ஆண்டுகளாக இவர் கண்டுபிடித்துள்ள கல்வெட்டுகளும் செப்பேடுகளும் காசுகளும் தமிழக வரலாற்றுக்குப் புத்தொளி தருபவை. தமிழ் வட்டெழுத்தில் காணப்பெறும் இந்தளூர் கோழி நடுகல்லக் கண்டறிந்து. இவர் எழுதிய ஆராய்ச்சிக்கட்டுரை, தொல்பொருள் துறையில் இவருக்குப் பெயரும் புகழும் ஈட்டித் தந்தது. மற்றும் வீரகேரளன் காசு, கன்னரதேவனின் கல்வெட்டு முதலியவை அப் புகழை மேலும் வளர்த்தன. தொடர்ந்து இவர் கண்டறிந்துள்ள புதிய புதிய கல்வெட்டுகளும், அவற்றைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளும் மிகச் சிறப்பானவை. அண்மைக் காலத்தில் இவர் கண்டுபிடித்துள்ள புத்திரன்கோட்டை பாண்டியர் கல்வெட்டுகளும் கீழ்சேவூர் கல்வெட்டுகளும் தெலுங்கு கல்வெட்டுகளும் அற்புதமானவை. தாமரைக்கண்ணனின் அரிய முயற்சிகளும் ஆய்வுகளும் தமிழக வரலாற்றில் சிறந்த இடம் பெறத்தக்கவை. பல சந்தர்ப்பங்களில் நானும் அவரும் புதிய கல்வெட்டுக்களைக் கண்டு பிடித்து உள்ளோம். கல்வெட்டு ஆராய்ச்சி சம்பந்தமாக எனக்கும் திரு. தாமரைக்கண்ணன் அவர்களுக்கும் நிறைய தொடர்பு உண்டு. நேரிலேயோ அல்லது கடிதம் மூலமாகேவா ஆய்வின் இன்பத்தைச் சுவைப்போம்! ஒரு சமயம் சென்னையிலிருந்து காரில் வந்து கொண்டு இருந்தேன். அச்சிறுப்பாக்கத்தில் பாதை ஓரமாக உள்ள ஒரு கடையில் நின்று கொண்டிருந்தார். காரை நிறுத்தி ‘வணக்கம்’ சொன்னேன். ‘வாருங்கள் வாருங்கள்’ என்று அன்புடன் அழைத்தார். சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்து விட்டு அவரை என்னுடன் காரில் அழைத்துச் சென்றேன். சாரம் என்ற ஊர் வந்தவுடன் காரை நிறுத்தி, அந்த ஊர் சிவன் கோயிலுக்கு அவரை அழைத்துச் சென்றேன். நிருபதுங்கவர்மனின் கல்வெட்டைப் பார்த்ததும் ஆனந்தம் கொண்டார். மூன்றாம் குலோத்துங்கரின் கல்வெட்டைப் பார்த்துக் கண்கலங்கினார். பிறகு என்ன? புகைப்படங்களுடன் சாரம் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையை அடுத்த வாரமே ‘தினமணி’ சுடரில் வெளியிட்டார். இவ்வாறு இவர் உடனுக்குடன் வெளியிட்டுள்ள கல்வெட்டு ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஏராளம்…. ஏராளம். 1983 மே மாதத்தில் குடந்தை அருகில் உள்ள தாராசுரத்தில் விழா ஒன்று நடத்தினேன். அவ்விழாவில் சோழர் வரலாறு பற்றிய அரிய செய்திகளை அவருக்கே உரிய பாணியில் தாமரைக்கண்ணன் வெகு அழகாக எடுத்துக் கூறினார். திரு தாமரைக்கண்ணன் முத்தமிழில் வல்லவர்; தமிழுக்கு அவர் செய்திருக்கும் தொண்டு மகத்தானது. இன்னும் பல காலம் வாழ்ந்து திரு தாமரைக்கண்ணன் தமிழுக்குத் தொண்டாற்ற இறைவனை இறைஞ்சுகின்றேன். அறிமுகவுரை 31.1.1989