நண்பர் தாமரைக்கண்ணன் புலமைச் சிறப்பைக் கடந்த எட்டு ஆண்டுகளாக நான் நன்கு அறிவேன்.தினமலர் நாள் இதழில் தாமரை, ஜனநாதன், பாஞ்சாலிமகன், அம்சா,
அம்பா, அச்சிறுபாக்கத்தார், யாரோ, ஜானகி ராமன் போன்று பல புனைபெயர்களில், சிறுகதை, நாவல், நாடகம், வரலாறு, ஆராய்ச்சி, கவிதை முதலான சுமார் 300 நூல்களுக்கு மேல் மதிப்புரை எழுதியுள்ளார்.
கவிதை நூல்களுக்குள் கவிதை நயத்தோடு மதிப்புரைகள் எழுதினார். இலக்கிய நூல்களுக்கு இலக்கிய நோக்கோடு வரைந்தார். ஆய்வு நூல்களுக்கு மிகச் சிறந்த ஆராய்ச்சி அணுகுமுறையோடு அலசினார்.இவர் எழுதியுள்ள நூல் மதிப்புரைகள் நடு நிலைமையுடன் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
நூலாசிரியர்களின் தனிப்பட்ட கொள்கைகளை மனத்தில் கொண்டு மதிப்புரை எழுதாமல், நூல்களின் மூலம் நூலாசிரியர்களின் மனவியற்கோட்பாடுகளை அகழ்ந்து இவர் எழுதியுள்ள மதிப்புரைகள் ‘விமர்சன உலகின்’ ஒளிக்கீற்றுகள் ஆகும்.இத்தகைய புதிய அணுகுமுறைகளைக் கையாண்டு அதில் வெற்றியும் படைத்துள்ளார்.
பல்துறை எழுத்தாளராகிய இவர் நூல் பதிப்புத்துறையிலும் வல்லவர். இவர் எழுதியுள்ள நூல்களைக் கண்ணைக்கவரும் வகையில் அற்புதமாகப் பதிப்பித்துள்ளார்.தொல்பொருள் ஆய்வுத் துறையில் இவர் கண்டுபிடித்துள்ள புதிய கல்வெட்டுகளும், எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகளும் தமிழக வரலாற்றுக்குப் பெரிதும் துணை புரியக் கூடியவை.
தமிழ் இலக்கிய உலகின் சிறுகதைத்துறை, நாடகத்துறை, கல்வெட்டு ஆய்வுத்துறை, நூல் மதிப்புரைத்துறை முதலான பல துறைகளிலும் இவர் பெயர் நிச்சயம் இடம் பெறும்.அவ்வாறு இவர் பெயர் இடம் பெறாது போனால் அந்தந்தத் துறைகளின் ஆய்வுநூல்கள் முழுமை பெற்றவை ஆகா என்பது என் கருத்து. அந்த அளவுக்கு ஒவ்வொரு துறையிலும் தமது எழுத்து வன்மையால் தனித்தன்மை பெற்றுள்ளார்.
திரு. தாமரைக்கண்ணன் பழகுவதற்கு இனிமையானவர். நல்ல நட்பின் இலக்கணமாகத் திகழ்பவர்.ஒரு நொடிப்பொழுதைக்கூட வீணாக்காமல் தேனீயைப் போல் எந்நேரமும் சுறுசுறுப்பாகச் செயலாற்றிவரும் ஆர்வமே இவர் புகழுக்குக் காரணம். இவருடைய ஓயாத உழைப்பும் திறமைகளுமே நான்கு முறை தமிழக அரசின் பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றுத்தந்துள்ளன. 1987- 88க்கான மாநில நல்லாசிரியர் விருதையும் பாராட்டிதழையும் பரிசையும் பெற்றுத் தந்துள்ளன. மேலும் பல பரிசுகளையும் பாராட்டுகளையும் இவர் பெறுவார் என்பது உறுதி. அறிமுகவுரை 25.1.1989