எண்ணில்லாத் தகுதிகளின் இருப்பிடமாய்த் திகழுகின்ற தண்டமிழின் தகுதிசால் தாமரைக்கண்ணர், என்றும் என் இதயத் துள்ளினிக்கும் இலக்கியத்தின் ஏந்தலவர்! இந்நிலத்தின் புகழ்விளக்கை ஏந்திநிற்கும் மாந்தரவர்!
கற்கண்டுத் தேன்தமிழில் கற்பனவெல் லாம்கற்றார்! கற்பனைத்தே ரேறியவர் கதைநாவல், நாடகத்தின் விற்பனராய்த் தலைதூக்கி வெற்றி நடைபயின்றார்! அற்புதத்தின் அற்புதமாம் அறிவின் வழிதொடர்ந்தார்!
கடும் உழைப்பின் ஓர் வடிவம் கணக்கில்லா வெற்றிகளைத் தொடும் ஆவ லோடுழைக்கும் துணிச்சல்வழித் தொண்டரிவர்! தடுமாறாக் கொள்கைகளின் தடம்பற்றிப் போகின்ற புடம்போட்ட தங்கமிவர் புதுமைவழிப் புவலரிவர்!
பரிசுகளும் பாராட்டுப் பட்டயமும் இவர் வீட்டின் வரிசையிலே நின்றுநமை வணங்கி வரவேற்கும்! முரசாக மேடையிலே
முழங்கிமுத் தமிழ் வளர்க்கும் அரசரிவர் ஆம்! அன்பின் அரசரிவர் அறிவரசர்!
தோற்றத்தில் மூவேந்தர் சாயல் முகங் காட்டும்! தோற்காத ஆட்சிப் பாக்கப் புலவர் திறன்மிக்கஆற்றல்கள் பன்னூறு
ஆண்மை அணிகூட்டும் மாற்றவரும் போற்றுகின்ற மதிநலமோ திகைப்பூட்டும்!
பண்புகளின் தொகுப்பான பைந்தமிழின் கூட்டான அன்பு நண்பர் தாமரையார் அறம்போலும் வாழியவே! அன்னுழைப்பின் திறனாலே தாயகத்தின் நலன்பேணி மன்னுயிரெல் லாம்போற்ற மாண்புடையார் வாழியவே!திண்டிவணம் ‘நாடக மாமணி’ 3.8.1985 பட்டம் அளிப்பு விழா