செங்கற்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு நிலைத் தமிழாசிரியராகப் பணிபுரியும் புலவர் தாமரைக்கண்ணன்
அவர்களைக் கடந்த பதின்மூன்று ஆண்டுகளாக அறிவேன். சிறுகதை, நாவல், நாடகம், குழந்தை இலக்கியம் எனப் பல்வேறு துறைகளில் முப்பது நூல்கள் எழுதியுள்ளார். இவர் கல்வெட்டு ஆராய்ச்சித் துறையில், சுமார் 1300 ஆண்டுகளுக்கு முந்தைய கோழி நடுகல், வீர கேரளன் காசு, ஒரத்தியில் கன்னரதேவனுடைய தமிழ் – கன்னடக் கல்வெட்டுகள், முதலாம் இராசராசன் காலத்திய செப்புத் திருமேனிகள் போன்று பலவற்றைக் கண்டுபிடித்துத் தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத் துறைக்குத் தெரிவித்துத் தமிழக வரலாற்றுக்குத் துணைபுரிந்துள்ளார். வரலாற்றுக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் வழங்கியுள்ளார். இத்துறை திருக்கோயிலூரிலும், காஞ்சிபுரத்திலும் நடத்திய கோடைக் காலக் கல்வெட்டுப் பயிற்சியில் சிறப்புச் சொற்பொழிவுகள் நிகழ்த்தி உள்ளார். இவர் எழுதியுள்ள ‘வரலாற்றுக் கருவூலம்’ என்னும் கல்வெட்டு ஆய்வு நூல் தமிழக அரசின் பரிசைப்பெற்றுள்ளது. இவர் வரலாற்று ஆர்வமும் கலைக் கண்ணோட்டமும் கொண்டு விளங்குபவர். இவரது பணி சிறக்க எனது நல் வாழ்த்துக்கள்! அறிமுகவுரை 10.1.198